Monday, May 01, 2006

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு

இன்றைய இளைய தலைமுறையினருக்கு இடஒதுக்கீடு பற்றிய சரியான அறிவு இல்லை என்பதும் அதுபற்றிய தெளிவான அறிவு அவர்களுக்கு ஊட்டப்படவேண்டும் என்பதிலும் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. இடஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் உயர்சாதியினர் போன்று பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் கலந்துகொண்டு தம்முடைய வாதங்களை எடுத்து வைக்க முன்வருவதில்லை என்பதும் வருத்தம் அளிக்கும் செய்தியே.

கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களாக நூறு விழுக்காடு இடஒதுக்கீட்டை தானாகவே எடுத்துக்கொண்ட உயர்ஜாதியினர் இன்று அவை பறிக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறொருவருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பொழுது மனம் புழுங்குவதும், பொங்கியெழுவதும், போராட்டம் நடத்துவதும் இயல்பே. ஆனால் அவர்கள் இச்சமயத்தில் இங்கே முன்வைக்கும் வாதமோ "அறிவு மற்றும் சாதனைத் திறன்" பற்றியது. இடஒதுக்கீடு காரணமாக வளர்ந்துவரும் இந்திய தேசத்தில் அறிவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், இது வளர்ச்சியில் மிகப்பெரிய தடைக்கல்லாக முன்னிற்கும் என்பது இவர்களுடைய வாதம்.

தனியார் நிறுவனங்களும் இதில் சலைத்தவர்கள் இல்லை. ஆசிம் பிரேம்ஜி, தன்னுடைய தொழிலானது அறிவு சார்ந்த பணித்துறை, இங்கு நான் அறிவு மற்றும் சாதனைத்திறன் அடிப்படையிலேயே வேலை வாய்ப்பு வழங்கமுடியும் என்று அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீடு என்பது தகுதியான மாணவர் வரிசையில் பின் தங்கிய வகுப்பினருக்கு சரியான சதவீதத்தில் நிரவல் இருக்கவேண்டும் என்பதேயொழிய அது முட்டாள்களை வேலைக்கு வைத்துக்கொள் என்பது இல்லை என்று அவர் அறியாமலிருக்கிறாரா என்ன?


இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை தமிழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான மாநிலமாக விளங்குவது கண்கூடு. இன்று அனைத்துத் துறையிலும் அனைத்துவகுப்பினரும் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். பொருளாதார ரீதியில் நன்கு வளர்ந்துள்ளது. எத்தனையோ உயர்வகுப்பினர் என்று கூறிக்கொள்ளும் அறீவு ஜீவிகள் தாமிழகமென்ன நாட்டைவிட்டே வெளியேறிவிட்ட பொழுதிலும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடுகிறது. வழக்குரைஞர்கள், மருத்துவர், பொறியியலார் என எல்லாத்துறைகளிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஒருகாலத்தில் வழக்குரைஞர் என்றால் இவர் இப்படித்தான் பஞ்சகட்சம் கட்டி, நன்றாக நாமத்தை மேலே இழுத்துவிட்டிருப்பார், ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற உருவ வேற்றுமை மறைந்து மங்கியிருக்கிறது. இவையெல்லாம் எப்படிச் சாத்தியப்பட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தால் தமிழகத்தை ஆண்ட திராவிட இயக்கங்களை நாம் மெச்சியேயாக வேண்டும்.

சீதாராம் யெச்சூரி சொல்லுவது போல " இட ஒதுக்கீட்டால் திறமையானவர்களை உருவாக்குவது பாதிக்கும் என்று எடுத்துக்கொண்டால் நாம் மறைமுகமாக பணக்கார வர்க்கத்தினருக்கு அவ்விடங்களை ஒதுக்கியிருக்கிறோம் என்றே பொருள். எத்தனை பணக்காரர்கள் தனது அறிவுத்திறனால் உயர் மற்றும் தொழில் கல்லூரிகளில் இடங்களைப் பெருகிறார்கள்? மிக மிகக் குறைவு. ஆனால் அவர்கள் தனது பணபலத்தால் இடங்களை வாங்குகிறார்கள். வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீடுகள் ஏலமிடப்பட்டு அதிக விலைக்கு வாங்குபவர்களுக்கு இடங்கள் விற்கப்படுகின்றன. அவர்களை விட திறமையான பிற்படுத்தப்பட்ட, காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு இடம் கிடைப்பதில்லையே? "

சிலர் பொருளாதார ரீதியிலாகத்தான் இடஒதுக்கீடு அமையவேண்டும் அவ்வாறில்லாமல் சாதிவாரியாக ஒதுக்கீடு அளித்தலால் சாதி வேறுபாடுகள் இன்னும் கூடிக்கொண்டிருக்குமேயொழிய குறையாது என்று அவரவர் அறிவுக்கு எட்டிய வாதங்களை அள்ளிவீசுவது உண்டு. ஆனால் அவர்களுடைய வாதங்கள் இந்த இடஒடுத்துக்கீடின் தேவை எப்படி ஏற்பட்டது என்பதன் வேரினை அவர் ஆராய்பவராக இருக்கவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.


இன்று ஒடுக்கப்பட்ட சமூகம் என்று முத்திரையிடப்பட்டவர்கள் கல்வி மறுக்கப்பட்டவர்கள். அவர்கள் தாங்கள் ஏழைகள் என்பதற்காக அக்கல்வி மறுக்கப்படவில்லை. அதேசமயத்தில் ஏழைகளாக, தினந்தோறும் தமது உணவுக்கு பிச்சையெடுத்துவாழவேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாட்டினைக் கொண்ட உயர் வகுப்பினர் நூறுசதவீதம் கல்வியைக் கற்றனர், அது மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டது, ஏகலைவர்கள் சூழ்ச்சியால் மாய்க்கப்பட்டனர். இவற்றிற்கு எல்லாம் என்ன காரணம்?.. பணமா? இலையே இல்லை... சாதி மட்டுமே. தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன் அவனுக்கு அளிக்கப்பட்ட அடிமைப்பணியையே மட்டுமே செய்யவேண்டும் என்ற வர்ண பேத அடிப்படைதான். அப்படியிருக்க தனது சாதியின் காரணமாகவே கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு எப்படி பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீடு பொருந்தும்?


நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் திரு.விவேக் குமார் சொல்லுவது போல எப்பொழுதெல்லாம், இடஒதுக்கீடு பற்றிய செய்தி எழுகின்றதோ அப்பொழுதெல்லாம் உயர் ஜாதியினர் மட்டுமே அறிவுஜீவிகள் மற்றவர்கள் எல்லாம் அடிமுட்டாள்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் புள்ளியியல் அவ்வாறு காட்டவில்லை என்கிறார் அவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவுஜீவிகளாக இருந்த அந்தணர்கள், கல்வி வழங்குவது அவர்தம் கடைமையாக இருந்தும், இந்தியா ஏன் இந்த அளவுக்கு கல்வியில் பின் தங்கியிருக்கிறது? வீர மரபினர் ஏன் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவை அடிமைப்பட வைத்தனர்? என்று அவர் எழுப்பும் கேள்விகளில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. இவர்களை நம்பி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட சமூகம் கல்வி பெறாமல் இருக்கமுடியும்? இவர்களது அறிவுத்திறமையில் இவர்களால் முன்னேற்றத்தைக் கொடுக்கமுடியும் என்ற வாதத்தை எவ்வாறு நம்பமுடியும் என்கிறார் திரு.விவேக்.

இந்தியாவின் தற்காலத்தைய முன்னேற்றம் கூட அது தற்போது புழக்கத்தில் உள்ள இடஒதுக்கீடுகளினால் முன்னேறிய பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட சமுகத்தினரால் தான் என்றால் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

6 Comments:

Blogger Prasanna said...

நீங்கள் சொல்வது போல் இன்று வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், ஆகிய பதவிகளில் தமிழகத்தில் மற்ற எந்த மா நிலத்திலும் இல்லாத வகையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலையில் இருக்கிறார்கள். சந்தோஷம். ஆனால், அந்த பஞ்சகட்சம் கட்டிய ஆசிரியர்கள் பணி புரிந்த காலத்தில் அரசு பள்ளிகளில் இருந்த தரம் இப்பொழுது இல்லயே, ஏன்?? 69% இட ஒதுக்கீடு தந்து அரசாங்க வேலையில் வாய்ப்பு இல்லை என்று ஆக்கிய பின் அவர்கள் பிற மானிலங்களுக்கோ பிற தேசங்களுக்கோ போகாமல் என்ன செய்வார்கள்?
>>>>>இந்தியாவின் தற்காலத்தைய முன்னேற்றம் கூட அது தற்போது புழக்கத்தில் உள்ள இடஒதுக்கீடுகளினால் முன்னேறிய பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட சமுகத்தினரால் தான>>>>>
இது உங்கள் கூற்றுதானே!! அதே தான் நானும் கேட்கிறேன். முன்னேறிய பிற்படுத்தப்பட்ட மக்களின் வாரிசுகளுக்கும் ஏன் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். இட ஒதுக்கீடு மூலம் அரசு பொதுப்பணித்துறையில் வேலை செய்யும் பொறியாளர் யாரேனும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
என் கருத்துகள் எவையேனும் தப்பாக இருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். நான் ரொம்ப சின்ன பையன் தான். தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க

5/01/2006 1:15 AM  
Blogger PARAMAN said...

திரு.பிரசன்னா,

நூற்றுக்குப் பத்து உயர் ஜாதியினர் தரமான கல்வி கற்றனர் என்றால் அது உண்மை. நூற்றுக்குப் பத்துப் பேர் மட்டும் முன்னேறினால் அது முன்னேற்றம் இல்லை. அதனால் தான் நம் நாடு எவ்வளவோ வளங்கள் இருந்தும் முன்னேற முடியாமல் போனது. பஞ்சகட்சம் கட்டிய ஆசிரியர்களில் நூற்றுக்கு 90 பேர் மனுவாதிகளாயிருந்ததை யாராலும் மறுக்க முடியாதது. அவர்கள் கல்வி கற்பிக்கும் கடமையில் பேதம் பார்த்தனர். உயர் ஜாதியினர் மட்டும் கல்வி கற்க வேண்டியவர் என்று அவர் கருதியதால் பொருவாரியான் மக்கள் கல்வியில் பின் தங்கிப் போனார்கள். தொடர்ந்து பல ஆண்டுகளாக, பல சந்ததிகளாக கல்வி மறுக்கப் பட்ட சமூகத்திற்கு, பொருளாதாரத்தில் பின் தள்ளப்படுத்தப் பட்ட சமூகத்திற்கு நாம் சில சந்ததிகள் வரைக்குமாவது ஒதுக்கீடு தந்தே ஆகவேண்டும். அது மட்டுமே இந்தியாவில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதுதான் நியாயமும் கூட.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு இனங்கள் ஒன்று பட்டு வாழும் இந்தியா போன்ற நாடுகளில் எல்லாத் துறைகளிலும் வெவ்வேறு இனத்தவருக்கும் பிரதிநித்துவம் அவரவர் மக்கள் தொகைகேற்ப அளிக்கப்படவேண்டும். அவ்வாறு செய்யாமல் போனால் இந்தியா இலங்கையில் தொடர்வது போன்றதொரு உள்நாட்டுப்போரை சந்திக்கவேண்டியிருக்கும். 12 விழுக்காடே உள்ள உயர்ஜாதியினர், இந்தியாவில் எத்தனை சதவீதம் வேலைவாய்ப்பில் உள்ளனர்? அதனால் புதிய வேலை வாய்ப்புகளிலும் தகுதியான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதின் மூலம் ஒரு சமநிலையை எட்டமுடியும்.

பரமன்.

5/01/2006 5:27 AM  
Blogger Prasanna said...

உங்கள் கூற்றுப் படி பார்த்தால் கூட இப்பொழுது அரசு வேலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட பொறியாளர்களும் அந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவர்கள் தானே. அதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஆனால் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பிராமணர் வீட்டு பிள்ளைகளுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்குமா???

5/01/2006 9:36 AM  
Blogger PARAMAN said...

திரு.பிரசன்னா,

நீங்கள் ஒரு விசயத்தைத் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள். ஏழைகள் எல்லா ஜாதியிலும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். ஏன் பணக்கார நாடுகளில் கூட ஏழைகள் இருக்கிறார்கள். சமூக ரீதியாகப் பார்த்தால் கூடுதல் சதவீதமாகவும், காலம் காலமாக கல்வி, பொருளாத உயர்வு மறுக்கப்பட்டவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருப்பவர்களுக்க்த் தான் ஒதுக்கீடு தரவேண்டுமேயொழிய.. ஏழைகள் என்ற ஒரே காரணத்திற்காக அல்ல. அதுமட்டுமல்லாது ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் சமமான நிரவல் அனைத்துத் துறைகளிலும் வரவேண்டும். அதற்கு இடஒதுக்கீடு மட்டுமே தற்போதைய சரியான வழி.

5/01/2006 11:41 AM  
Blogger Prasanna said...

///பொருளாத உயர்வு மறுக்கப்பட்டவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருப்பவர்களுக்க்த் தான் ஒதுக்கீடு தரவேண்டுமேயொழிய.. ஏழைகள் என்ற ஒரே காரணத்திற்காக அல்ல.///
அப்போ இனிமேல் நல்லா படிச்சாலும் ஒரு உயர்ஜாதி ஏழைக்கு இட ஒதுக்கீடு கிடயாது. நல்லா படிக்காட்டியும் ஒரு பணக்கார பிற்படுத்தப்பட்ட பையனுக்கு இட ஒதுக்கீடு உண்டு. இது எப்படி சமதர்ம சமூகம் உருவாக வழிவகுக்கும். இன்னைக்கு பிற்படுத்தபட்டவங்க போராடுறத போல உயர்ஜாதி என இப்போது அழைக்கப்படும் மக்கள் 100 வருஷத்துக்கு அப்புறம் போராடிகிட்டு இருப்பாங்க. படிச்சாதான் இடம்னு வந்தா எல்லாரும் படிப்பாங்க இல்லயா. அதத்தான் சொல்றென்.
நமது காலத்திலேயே தமிழகத்தில் சாதிகளை ஒழிக்க வேண்டும். நம்ம தாத்தா பண்ண தப்ப நாமளும் பண்ணி வரப்போற சந்ததிகள் கிட்ட திட்டு வாங்கி கட்டிக்க வேண்டாம். முன்ன ஓ.பி.சி மாணவனுக்கும் உயர்ஜாதி மாணவனுக்கும் கட் ஆஃப் மார்க் வித்தியாசம் 0.8. ஆனா இப்போ 0.1 ங்குற அளவுக்கு அவங்க வந்துகிட்டு இருக்காங்க. அதனால இந்த இட ஒதுக்கீடு பெருசா நல்லா படிக்குற பசங்களுக்கு ஒரு நன்மையும் இல்ல. ரொம்ப நன்றி. என்ன இதுவரைக்கும் யாரும் நீங கூப்டா மதிரி கூப்டதில்லை. (திரு. பிரசன்னா)

5/01/2006 10:17 PM  
Blogger thiru said...

//Prasanna said... அந்த பஞ்சகட்சம் கட்டிய ஆசிரியர்கள் பணி புரிந்த காலத்தில் அரசு பள்ளிகளில் இருந்த தரம் இப்பொழுது இல்லயே, ஏன்??//

அரசின் கல்விக்கொள்கை சம்பந்த பட்ட கேள்வி. எந்த கச்சம் கட்டியவர் இன்று ஆசிரியன் ஆனாலும் இது தான் நிலை. கல்வித்தரம் மாற காரணம் என்ன என்று எம்.ஜி.ஆர் அமைச்சரவை ஆட்களிடம் கேட்கப்படவேண்டிய கேள்வி இது.

நல்ல பதிவு பரமன்.

5/02/2006 4:10 AM  

Post a Comment

<< Home